ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானி ஆற்றுப்பாலம் அருகே ஆற்றங்கரையோரம் படித்துறையை ஒட்டியுள்ள வரசித்தி விநாயகர் கோயில் முன்பு கடந்த மாதம் பிப்.21ஆம் தேதி தலையில் ரத்தக் காயங்களுடன் 20 வயதுள்ள ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, கொல்லப்பட்ட நபர் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்த உணவகத் தொழிலாளி அப்துல் ரஜாக் (20) எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அப்துல் ரஜாக் கொலை வழக்கில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள, திருப்பாசேத்தியைச் சேர்ந்த விமல் (31) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த விமல் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த பத்து ஆண்டுகளாக ஆங்காங்கே தங்கி தனக்குக் கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் சத்தியமங்கலம் வந்த விமல், வரசித்தி விநாயகர் கோயில் முன்பு தங்கி கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதுதவிர சில திருட்டு சம்பவத்திலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி இரவு, சத்தி பேருந்து நிலையத்தில், தாளவாடி செல்வதற்காக காத்திருந்த ஜார்ஜ் என்பவரது பாக்கெட்டில் இருந்து 200 ரூபாய் திருடிக்கொண்டு வரசித்தி விநாயகர் கோயில் முன்பு வந்துள்ளார்.
அப்போது அங்கு படுத்து உறங்கிய அப்துல் ரஜாக்கிடமும் அவர் திருட முயன்றபோது, சுதாரித்த அப்துல் ரஜாக் விமலை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விமல், அருகிலிருந்த கல்லையெடுத்து அப்துல் ரஜாக்கின் தலையில் போட்டு கொலைசெய்து விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
தொடர்ந்து அவிநாசி, பழனி பகுதிகளில் அவர் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ரகசியத் தகவலின் பேரில் அவிநாசியில் உள்ள மரகதம் என்பவரது வீட்டில் பதுங்கி இருந்த விமலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத உள்ளீட்டு கடன் மோசடி: 3 பேர் கைது