அவுரங்காபாத் : பிகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கஸ்மா என்ற பகுதியில் இந்த வேதனையாக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டம் கஸ்மா பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்.8) உயிருக்கு ஆபத்தான நிலையில், நஞ்சுண்ட 12-16 வயதுடைய 6 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் தற்போது அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது 12-16 வயதுடைய தோழிகளில் ஒருவர் தனது உறவுக்கார பையன் ஒருவரை காதலித்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து ஊர்சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் உறவுக்கார பையன் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான காதலி, தனது தோழிகளுடன் இணைந்து விஷம் அருந்தியுள்ளார். அதில் சிக்கி பரிதாபமாக 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 6 சிறுமிகளும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆனாலும் 6 பேரும் தோழிகளாக இருந்துள்ளனர். இதனால் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், சிறுமிகள் தெரிந்து நஞ்சு உண்டார்களா? அல்லது அவர்களுக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காந்தேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், “இதில் அனைத்து பதின்ம சிறுமிகளின் வயதும் 12 முதல் 16 வயது வரை இருக்கும்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இது தொடர்பான விசாரணை நடந்துவருகிறது. உயிரிழந்த சிறுமிகளின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்றார். 3 சிறுமிகளின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : காதல் தோல்வி - சென்னையில் மாணவி தற்கொலை