தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்தி குளம் கிராமத்தில் வசிப்பவர் அசோகன் (27). இவர் சென்னையில் தேநீர்க் கடையில் மாஸ்டராக வேலை செய்துவருகின்றார்.
தற்போது கரோனா ஊரடங்கால் சொந்த கிராமத்துக்கு வந்துள்ள இவர், ஜூன் 22ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த அய்யாதுரை என்பவரை குடிபோதையில் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் சின்ன கோவிலான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மதுப்பிரியர் ரகளை
இதையடுத்து காவலர் பாலகிருஷ்ணன் புகார் மனுவை விசாரணைசெய்ய சென்றபோது அசோகன் குடிபோதையில் காவலரையும், கிராமத்து மக்களையும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.
அப்போது, திடீரென்று தெருவில் உள்ள சாக்கடையை எடுத்து வீசியும், காவலரின் இருசக்கர வாகனம், தலைக்கவசம் ஆகியவற்றை கட்டையால் அடித்து சேதப்படுத்தியும் உள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவலர், ஊர் பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் தகாத வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் சின்னகோவிலான்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
வைரலாகும் காணொலி
இச்சம்பவத்தை அருகில் இருந்த பொதுமக்கள் கைப்பேசியில் காணொலி எடுத்து இன்று (ஜூன் 24) வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சி தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் காணொலி காவல் துறையினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்த நபர் கைது'