கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை காளியப்பனூர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் க.பரமத்தி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று (பிப்.25) வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்றார். மாலை 6 மணி அளவில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தான்தோன்றிமலைகாவல் துறையினர், கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்தனர். அப்போது 19 வெள்ளி பொருட்கள் மற்றும் 3 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இதேபோல் தான்தோன்றிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பொன் நகர் பகுதியில், கிருஷ்ணமூர்த்தி என்பவரது பூட்டிய வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நவீன இருசக்கர வாகனத்தையும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2.5 சவரன் தங்க நகைகளையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
அடுத்தடுத்து கரூர் தான்தோன்றிமலை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இரு வீடுகளில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசையைக் காட்டியது, பொது மக்களையும், போலீசாரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிக அருகாமையில் இருக்கும் இப்பகுதியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் அதிகளவில் குடியிருந்து வருகின்றனர். இங்கு காவல் துறையினர், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதை பொதுமக்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் நூதனத் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது!