சென்னை: அபிராமபுரம் அன்னை சத்யா நகரைச்சேர்ந்தவர் தர்ம அரசு(24). கடந்த 16ஆம் தேதி மாலை தனது நண்பர்களுடன் மயிலாப்பூர் பல்லாக்கு நகர் மதுபானக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென கத்தியை எடுத்து வந்து, தர்ம அரசுவை வெட்டிவிட்டு தப்பிச்சென்றார்.
இதில் காயமடைந்த தர்ம அரசு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இது தொடர்பாக தர்மஅரசு அளித்தப்புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குறிப்பாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து, அதில் ஒருவர் கத்தியை எடுத்து தர்ம அரசுவை வெட்டி தப்பிச்செல்வது போல் பதிவாகி இருந்தது.
சிசிடிவி காட்சிகளில் பதிவான அடையாளங்களை வைத்து கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா(18) நுங்கம்பாக்கத்தைச்சேர்ந்த அஜித்குமார் (23), சைதாப்பேட்டையைச் சேர்ந்த சிவானந்தம்(19) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் கூச்சலிட்டுக்கொண்டு பல்லாக்கு நகர் வழியாக சென்ற போது, தர்ம அரசு மட்டும் கை அசைத்து மிரட்டும் தொனியில் பேசியதாகவும், இதனால் கோபமடைந்து கத்தியை எடுத்து வந்து தர்ம அரசுவை வெட்டியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்த மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போதை ஆசாமிகள் இருசக்கர வாகனத்தில் வந்து தர்மஅரசுவை வெட்டிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: தனியாக உள்ள பெண்களே குறி.. பலாத்கார கொள்ளையனுக்கு 10 ஆண்டு சிறை..!