ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரியும் ஹபீப் முகமது என்பவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், ராமநாதபுரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முதுகுளத்தூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், அனைத்து மகளிர் காவலர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் ஹபிப் முகமது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
தகவல் எண்கள்
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்குத் தகவல் அளிக்கலாம்.
காவல் கண்காணிப்பாளர் - 9498129498,
காவல் கூடுதல் கண்காணிப்பாளர் - 9443282223,
காவல் துணைக் கண்காணிப்பாளர் முதுகுளத்தூர் - 9498207461
மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் - 8300000592
என்று காவல் துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி குண்டர் சட்டமும் பாயும்
தகவல் தெரிவிப்பவரது விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம், சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் எனவும் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை'