சென்னை: தாம்பரம் அருகே மகள் திருமணத்திற்குப் பணம் இல்லாததால் தாய் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சென்னை மேற்குத் தாம்பரத்தை அடுத்த மூகாம்பிகை நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் செழியன்(59). அவரது மனைவி நிர்மலா தேவி(55). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜனவரி மாதம் மகளுக்குத் திருமணம் நிச்சயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வேளையில், திருமணம் மார்ச் மாதம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், பெண் வீட்டார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். மணமகள் வீட்டில் போதிய பணம் இல்லாததால் பல பேரிடம் நிர்மலா தேவி கடன் கேட்டு வந்துள்ளார். கடன் கிடைக்காததால் மனமுடைந்த தாய் நிர்மலா தேவி வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
பின்னர் இது குறித்து அக்கம்பக்கத்தினர் தாம்பரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் வந்த அவர்கள், நிர்மலா தேவியின் உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து தாம்பரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், தாய் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.