ஈரோடு: அந்தியூர் அருகேவுள்ள செல்லப்ப கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (55). இவர் மண்பாண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தார். மேலும், கட்டட வேலைகளையும் செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு செந்தில்குமார் (35) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், அர்ஜுனன் அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
நீண்டநாள் பிரச்சினை
அந்தப் பெண்ணிற்கு, அர்ஜுனன் தனக்குச் சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை எழுதி வைக்கப்போவதாக கூறி வந்துள்ளார். இதன் காரணமாக, அவரது மகன் செந்தில்குமார் அடிக்கடி தனது தந்தையுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நேற்று (செப்.12) வேம்பத்தி தனியார் பள்ளி அருகே நின்றுகொண்டிருந்த அர்ஜுனனிடம், செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காயமடைந்தவர் உயிரிழப்பு
வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமார் தனது தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவசர ஊரதி மூலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அர்ஜுனன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆப்பக்கூடல் காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் செந்தில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வெழுத வந்த மாணவனின் தந்தைக்கு நேர்ந்த துயரம்