சென்னை: அம்பத்தூரை அடுத்த பாடி, குமரன் நகர் மகாத்மா காந்தி மெயின் ரோட்டைச்சேர்ந்தவர், சேகர் (46). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர்களது மூத்த மகன் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இளைய மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை சேகர் மற்றும் அவரது மனைவி வழக்கம்போல வேலைக்குச்சென்றுவிட்டனர். அதன் பிறகு மகன்கள் இருவரும் வீட்டுக்கதவை பூட்டிவிட்டு கல்லூரி, பள்ளிக்குச்சென்றுவிட்டனர். பின்னர் மாலை கல்லூரி படிப்பு முடித்து வீட்டிற்கு மூத்தமகன் வந்த போது, அங்கு அவரது தம்பி தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டநிலையில் இருந்தார். இதனைக்கண்ட சகோதரர் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவன் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு செல்போனில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அதில் ’தன் பள்ளி ஆசிரியர்கள் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும், கையை அறுத்துக்கொண்டு சாகப்போகிறேன், இந்த உலகம் பிடிக்கவில்லை’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும் பேசிய சிறுவன், ’தனது சாவுக்கு பெற்றோர் காரணம் அல்ல, முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம், பள்ளி அராஜகம் செய்வதாகவும் குறிப்பிட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் வீடியோவில் பேசியுள்ளார்.
தன்னை சென்னையில் புதைக்க மற்றும் எரிக்க வேண்டாம் எனவும்; சொந்த ஊரில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டுமெனப் பதிவிட்டு உள்ளார். மேலும் மற்றொரு வீடியோவில் தூக்கு மாட்டிக்கொள்வது பதிவாகியுள்ளது. முன்னதாக தந்தை கண்டித்ததால் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார் எனப்புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து பேசிய மாணவனின் தந்தை சேகர், ’தனது மகன் மரணத்திற்குக் காரணமான பள்ளி ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்’ எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்... நீதிகேட்டு முதலமைச்சரிடம் நடந்தே சென்று மனு அளிக்க பெற்றோர் முடிவு...