விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தின் எஸ்.பி.எம். தெருவில் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில், பட்டாசு தயாரிப்பின்போது திடீரென நேற்று (செப். 10) வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுவந்த எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஒருவர் உயிரிழப்பு
சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எஸ்.பி.எம். தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் (52) என்பவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேலும், முத்து செல்வி (36), செல்வமேரி (40), சுகந்தி (24), சீதாலட்சுமி (38), முத்துராஜ் (45), பாலமுருகன், முத்து முனிஸ்வரி (28) ஆகிய ஏழு பேர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
3 பிரிவுகளின்கீழ் வழக்கு
இதையடுத்து, அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்ததாக பாலமுருகன், அவரது சகோதரர் முத்துராஜ் உள்பட ஒன்பது பேர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: ஒருவர் மரணம், 8 பேர் காயம்