தேனி மாவட்டம் பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவதானப்பட்டி, தாமரைக்குளம், ஜெயமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அண்மையில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போயுள்ளது. இதில், குறிப்பாக ராயல் என்ஃபீல்டு ரக வாகனங்கள் தான் அதிக அளவில் திருடு போயிருப்பது கண்டறியப்பட்டது.
இருசக்கர வாகன திருட்டுக் கும்பலை பிடிப்பதற்கு பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனிப்படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் தேவதானப்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சரவணன் (எ) வெள்ளையனுடன் இணைந்து ராயல் என்ஃபீல்டு ரக வாகனங்களை சூர்யா திருடியது தெரிய வந்தது.
திருடப்பட்ட வாகனங்கள் தஞ்சாவூரில் உள்ள மெக்கானிக் விக்னேஷ்குமார் உதவியுடன் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அங்கு மறு விற்பனை செய்யப்பட்டு வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து சூர்யா, மெக்கானிக் விக்னேஷ்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விக்னேஷ்குமாரிடம் தஞ்சாவூரில் விற்பனைக்கான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 வாகனங்கள், ஏற்கனவே மறு விற்பனை செய்யப்பட்ட 2 வாகனங்கள் என மொத்த நான்கு ராயல் என்ஃபீல்டு வாகனங்களை தேவதானப்பட்டி காவல்துறையினர் மீட்டனர்.
இந்த திருட்டுத்தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமைறைவாக உள்ள சரவணன் (எ) வெள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராயல் என்ஃபீல்டு ரக இருசக்கர வாகனங்களை மட்டும் குறிவைத்து திருடும் கும்பல் பிடிப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருமகனை வெட்டிக்கொலை செய்த மாமனார் கைது!