சென்னை: ராயப்பேட்டையை சேர்ந்தவர் பஷீர் அகமது(55). இவர் கடந்த 11ம் தேதி தன்னிடம் உள்ள நகையை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் சுமார் 24 லட்ச ரூபாய்க்கு விற்றார்.
பின்னர் திருவல்லிக்கேணியை சேர்ந்த தனது நண்பர் காஜா மொய்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பணத்துடன் சென்றிருக்கிறார். அப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகே இருசக்கர வாகனத்தில் வரும்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் காவல்துறையினர் எனக் கூறி அவர்களை நிறுத்தியுள்ளனர்.
24 லட்ச ரூபாய்க்கான ஆவணத்தை கேட்ட போது, ஆவணம் இல்லாததால், காவல் நிலையத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு பணத்துடன் 4 பேரும் சென்றுள்ளனர். காவல் நிலையத்துக்கு பஷீர் அகம்மது சென்ற போதுதான், அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பஷீரின் புகாரை பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட பின்பு வியாசர்பாடியில் உள்ள துணிக்கடை ஒன்றில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க கொள்ளையர்கள் டிசர்ட்டை மாற்றி தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து செல்போன் லொக்கேஷன் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த நாகர்கோவிலை சேர்ந்த பசூல் மகமூத், அவருடைய மகன் பரூக் தாகா, மற்றும் இருதய ஆரோக்கிய பிரகாஷ், இவர்களுடைய நண்பர்களான வேளச்சேரியை சேர்ந்த காதர் மைதீன், நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட ஆறு பேரை சென்னையில் வைத்து பூக்கடை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பூக்கடை பகுதியில் ஹவாலா பணம் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், எனவே சுமார் பத்து நாட்களாக சேப்பாக்கம் பகுதியில் லாட்ஜில் தங்கி, பூக்கடை பகுதியில் நோட்டமிட்டு, இங்கு வரக்கூடிய குருவிகளை குறி வைத்து நோட்டமிட்டு, அவர்களுடைய கவனத்தை திசை திருப்பி, போலீசார் என கூறி தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று, இதில் நான்கு பேர், மப்டி பணியில் உள்ள போலீசார் போன்று வெள்ளை சட்டை காக்கி பேண்ட் அணிந்து கொண்டு, பஷீர் அகமது கவனத்தை திசை திருப்பி, பயமுறுத்தி 24 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட பசூல் மகமூத் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு திருச்சியில், இதேபோன்று குருவிகளின் கவனத்தைத் திசை திருப்பி, கொள்ளையடித்த வழக்கும் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கொள்ளையடித்த 24 லட்சம் ரூபாய் பணத்தில், கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரூபாய் பணம் வரை செலவு செய்து ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 17 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனங்கள் தொடர் திருட்டு... புகாரின்பேரில் 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்... 3 பேர் கைது