பெரம்பலூர்: தண்ணீர் லாரி மோதி விவசாயி உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயியான இவர் கே.எறையூர் கிராமத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது முன்னாள் சென்ற தனியார் கிரஷர் நிறுவனத்திற்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரியை முந்த முயன்ற போது, சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி, சாலையில் இருசக்கர வாகனத்துடன், லாரியின் முன் பகுதியில் விழுந்த ராமச்சந்திரன் மீது லாரியின் இரண்டு சக்கரங்களும் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கே.எறையூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமச்சந்திரன் உயிரிழந்ததை கண்டித்து பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் கே.எறையூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலையின் குறுக்கே தடுப்புகளையும், கற்களையும் வைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், இறந்த ராமச்சந்திரனின் உடலை உடற்கூராய்வுக்கு எடுத்து செல்ல அனுமதி மறுத்ததோடு, இந்தப் பகுதியில் உரிய உரிமம் இன்றி செயல்படும் பத்துக்கும் மேற்பட்ட கல்க்குவாரிகளை மூட வேண்டும்.
கல்குவாரிகள் சார்ந்த கிரஷர் நிறுவனங்களையும் மூட வேண்டும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீதும், அதிவேகமாக செல்லும் லாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்தில் உயிரிழந்த ராமச்சந்திரனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்களும், காவல்துறை உயரலுவலர்களும் விரைந்து வந்து நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது.
இந்த விபத்தில் தொடர்புடைய டேங்கர் லாரியின் ஓட்டுநர் நக்கசேலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் என்பவரை மருவத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.