ரேவா : மத்தியப் பிரதேச மாநிலம் மங்காவான் தாலுகா ரேவா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உர்ஸ் என்ற இஸ்லாமிய விழா நடந்தது. இந்த விழாவில் பிரபல சூபி பாடகர் ஷெரீப் பர்வேஸ் (Sharif Parvaz) என்பவர் கலந்துகொண்டார்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற இந்த விழாவில் ஷெரீப் பர்வேஸ் நாட்டுக்கு எதிரான கருத்துகளை பேசினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆதாரங்களுடன் ரேவா காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஷெரீப் பர்வேஸ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலகம் மூட்டுதல்), 505 (2) (மத நிகழ்ச்சிகளில் அவதூறு பரப்புதல்) மற்றும் 298 (பொது இடத்தில் ஆபாசமாக பாடுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது ஹன்சாரி கூறுகையில், “அவரின் கருத்துக்கள் பின்னர்தான் தெரியவந்தன. விழா கமிட்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் கருத்துகளை கண்டித்துள்ளோம்” என்றார்.
மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், சூபி இஸ்லாமிய கலைஞர்கள் எந்த இசை கருவியை வேண்டுமானாலும் மீட்டுங்கள். ஆனால், நாட்டுக்கு எதிராக கருத்துகள் வேண்டாம்” என்றார்.
சூபி பாடகர் ஷெரீப் பர்வேஸ் மீதான வழக்கு குறித்து ஏசிபி சிவ்குமார் வர்மா கூறுகையில், “நிகழ்ச்சி குறித்த வீடியோ மார்ச் 28ஆம் தேதி வைரலானது. பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது ஐபிசி153,505 (2) மற்றும் 298 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை கைது செய்ய போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க : டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராணா அயூப் மனு!