சென்னை: ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ''பொதுமக்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை இணையதள வர்த்தகம் மூலமாகவோ, சமூக வலைதளத் தகவல்களின் மூலமாகவோ போலித் தகவல்களின் பேரிலோ வாங்க முயல வேண்டாம். இணையதளம் மூலம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுவரை சென்னை பெருநகரில் தாம்பரம், ஐசிஎஃப், பல்லாவரம், வேப்பேரி, பள்ளிக்கரணை, கிண்டி, ரெட்ஹில்ஸ், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் தலைமைச்செயலகம் காலனி காவல்நிலையச் சரகங்களில் காவல்துறையினரின் நடவடிக்கை மூலம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, போலி ஆவணங்கள் கொடுத்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிப் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 123 ரெம்டெசிவிர் மருந்துகள், 6 பங்களாதேஷ் ரெம்டெசிவிர் மருந்துகள், 140 நினவீர் மருந்துகள் உள்ளிட்ட 269 மருந்து குப்பிகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், மயிலாப்பூர் துணை ஆணையாளர் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் இ-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், மே 14, அன்று மதுரவாயல் நாகாத்தம்மன் தெருவில் இயங்கி வரும் ’மெடிஸ்டார் ஹெல்த் கேர்’ என்ற மருந்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் புவனேஷ்வர் (36) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் ரெம்டெசிவிர் மருந்தைக் கொண்டிதோப்பு, ஆயலூர் முத்தையா தெருவில் இயங்கி வரும் ’நவ்கர் இன்ஸ்டிஸ்டியூட்டர்ஸ்’ என்ற மருந்து விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் நிஷித் பண்டாரி (32) என்பவரிடம் இருந்து எந்த விதமான ஆவணமும் இன்றி, தான் வாங்கி வந்து அரசாங்க அனுமதியின்றி விற்பனை செய்வதாகத் தெரிவித்ததன் பேரில், காவல் குழுவினர் கொண்டிதோப்பு சென்று ’நவ்கர் டிஸ்டிப்யூட்டர்ஸ்’ நிறுவனத்தைச் சோதனை செய்து, அங்கிருந்த 145 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளைப் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும், குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்வேண்டும் என அறிவித்துள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை: மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு
அதன்பேரில், கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கி வைத்த குற்றவாளிகள் புவனேஷ்வர், நிஷித் பண்டாரி ஆகியோரைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய இ-1 மயிலாப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், நேற்று முந்தினம் (மே 21) உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 2 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் Remdesiver, Tocilizuma-b, Amphotericin மருந்துகள் மற்றும் Oxygen Concentrator இயந்திரங்களைத் தருவதாக இணையதளத்தில் வரும் அழைப்புகள் மற்றும் விளம்பரத்தைக் கண்டு வி-6 கொளத்தூர் நிலைய எல்லையில் ஜெயச்சந்திரன் என்பவர் ரூ.40,800க்கும், எஸ்-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் ஸ்ரீகணேஷ் என்பவர் ரூ.1,23,000, ரேகா என்பவர் ரூ.73,000 செலுத்தியும், எச்-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லையில் ஒரு மருத்துவர் ரூ.1,67,000 மற்றும் மற்றொரு மருத்துவர் ரூ.14,000 என இணையதளத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்ததாகப் புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இணையதளத்தில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பதாகக் கூறி அதிக விலைக்கு விற்ற கே.கே.நகரைச் சேர்ந்த ஆதித்யன் (24), பட்டாளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (27), சாஸ்திரி நகரைச் சேர்ந்த சையது ரஞ்சித் (38), ஆகியோரை ஜே-2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மே 15 அன்று கைது செய்து, ரெம்டெசிவிர் 2 குப்பிகள் மற்றும் பணம் ரூ.89,000 பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.