ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா (45). அங்குள்ள கடல்பகுதியில் கடல் பாசி சேகரிக்கும் பணி செய்து வந்தார். இவர் கடந்த மே 24ஆம் தேதி காலை, கடல் பாசி சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அன்று மாலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கணவர் பாலு, ராமேஸ்வரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இறால் பண்ணையை எரிப்பு: புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக சந்திராவைத் தேடி வந்த நிலையில், வடகாடு காட்டுப் பகுதியில் அரை நிர்வாணத்துடன் சந்திரா எரிந்து பிணமான நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் செயல்பட்டு வந்த இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே ஊருக்குள் தகவல் பரவியதில் ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீக்கறையாக்கினர்.
இதனிடையே, போலீசாரின் தீவிர விசாரணையில் இறால் பண்ணையில் வேலை பார்த்த வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் சந்திராவை வழிமறித்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. அடையாளம் தெரியாத வகையில் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
மற்றொருவர் யார்?: பொதுமக்களின் கடும் கோபம் காரணமாக, வடமாநில இளைஞர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர். இதனையடுத்து, போலீசார் சம்பவத்திற்குக் காரணமான மூன்று பேரில் இருவரை கைது செய்துள்ளனர். இறால் பண்ணையில் வேலை பார்த்த ராகேஷ் (25), பிரசாத் (18), ரஞ்சன் ராணா (34), விகாஸ் (24), பிரகாஷ் (22), பிண்டு (18) ஆகிய ஆறு ஒடிசா மாநில இளைஞர்களில் பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோர் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என உறுதியான நிலையில், மற்றொருவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. இதையடுத்து, மற்றவர்களுக்கும் இதிலுள்ள தொடர்பு குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்த நகையைத் திருடி, அவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு அடகுக்கடையில் வைத்து பணம் பெற்று ஒடிசா தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவல்களையும் போலீசார் தற்போது விசாரித்து வரும் நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடற்கூறாய்வு அறிக்கையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் இளைஞர்கள் பொதுமக்களின் தாக்குதலில் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவ சிகிச்சையில் உள்ளதுடன், ரகசியமான இடத்தில் வைக்கப்பட்டு போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என வடகாடு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய வடகாடு கிராம மக்களை ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்சா சந்தித்தார். அப்போது, பொதுமக்களின் வேண்டுகோளை முதல்வரிடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும் ரூ.2 லட்சத்தை அக்குடும்பத்திற்கு நிவாரண உதவியாக வழங்கினார்.