திருவள்ளூர்: ஆர்.கே. பேட்டை அடுத்த வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவாஜி மகன் பிரதாப்பும்(23), புதூர்மேடு சேர்ந்த ஆனந்தன் மகன் சஞ்சய்யும்(18), தனஞ்செயன் மகன் பிரசாந்த்தும்(19), வெங்கடேசன் மகன் பரத்நாஜ்(19) ஆகிய 4 பேரும் நண்பர்களாக இருந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை புதூர் மேடு வார சந்தைக்கு அருகில் பேசி கொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சஞ்சய், கையில் வைத்திருந்த கத்தியால் பிரதாப்பை குத்தியுள்ளார். அதனைத் தடுக்க முயன்ற பிரசாந்த்தையும் கத்தியால் குத்தியுள்ளார்.
அப்போது பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதாப், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவமானது பொதுமக்கள் நின்றிருருந்த இடத்தில் நடைபெற்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்தர் குமார், கொலையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொலை வழக்கில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என இரண்டு நாள்களாக இறந்தவர்களின் உடலை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர்.
மேலும் பெங்களூரில் கூலி வேலை செய்துவரும் சஞ்சய் மீது முன்னதாகவே கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், இந்நிலையில் பிரதாபிற்கு சஞ்சய் கடனாக வழங்கிய செல்போனுக்கு பணம் கேட்டதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த சஞ்சய் பிரதாப்பை கத்தியால் குத்தியதாகவும், தடுக்க முயன்ற பிரசாத்தையும் பரத்ராஜ் உதவியுடன் குத்தி கொலை செய்ததாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் மற்றும் பரத்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று கூறி கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சோளிங்கர் சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின் திருத்தணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன், ஆர்.கே. பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்தர் குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை சம்பவத்தில் முறையாக விசாரணை நடத்தப்படும் என்று டி.எஸ்.பி உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய மாஜி அமைச்சர் வாக்குமூலம்!