புதுச்சேரி: நாட்டுப் பட்டாசுகளை சாக்கு மூட்டைகளில் கட்டிக் கொண்டு தீபாவளி கொண்டாட ஏழு வயது மகனுடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றபோது, மூட்டையில் இருந்த வெடிப்பொருள்கள் வெடித்துச் சிதறியதில் தந்தை - மகன் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன்(32). இவர் தமிழ்நாடு எல்லைப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக 7 வயது மகன் பிரதீசுடம் சென்று விட்டு, தீபாவளியை கொண்டாட இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் நாட்டுப் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டமான கோட்டக்குப்பம் கிழக்குக்கடற்கரை சாலை சந்திப்பில் வந்துகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக, சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த நாட்டுப் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த விபத்தினால் சாலையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமும், அருகிலிருந்த வீட்டின் கூரைகளும் சேதமடைந்து, சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. விபத்தின்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ஷர்புதீன், கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால், இருமாநில காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், ஒரு நொடியில் வெடி சிதறியது நாசமானது பதிவாகியிருந்தது.
மேலும், சாதாரண பட்டாசுகள் என்றால், ஒரே நேரத்தில் இவ்வளவு வீரியத்துடன் வெடிக்காது என்பதால், வேறு ஏதேனும் தேவைக்காக வெடி மருந்துகள் மூட்டைக்குள் வைத்து எடுத்துச் சென்றாரா என்ற கோணத்திலும் காவல் துறை வல்லுநர் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி - வெடித்து சிதறிய பட்டாசுகள் - இருவர் உயிரிழப்பு