சென்னை: ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளை அடித்த கொள்ளையர்களை ஹரியானாவில் துணை ஆணையர் ஹரிகரன் பிரசாத் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை மூன்று கொள்ளையர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில் அமீர் ஹர்ஷ், வீரேந்தர் என்ற இரண்டு கொள்ளையர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். அமீர் ஹர்ஸை ஐந்து நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொள்ளையர்கள் விமானம், ஜீப், லாரி மூலமாக சென்னைக்குள் வந்ததாக தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி சென்னையில் ஆறு இடங்களில் மட்டுமே அமித் அர்ஷ், விரேந்தர் கும்பல் கொள்ளையடித்ததாகவும், மற்றவர்கள் குறித்தான தகவல் தெரியாது என தெரிவித்தனர். இதனால் விசாரணையின் நான்காவது நாளான இன்று(ஜூன்.28), பெரியமேட்டில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் எவ்வாறு கொள்ளையடித்தான் என்பதை நடித்து காட்டுவதற்காக, கொள்ளையன் அமீரை காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
தெற்கு இணை ஆணையர் நரேந்திரன் நாயர், துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் கொள்ளையன் நடித்து காட்டும் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. சென்னையில் 15 இடங்களில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்து இருந்தாலும், பெரியமேடு ஏடிஎம்-ல் மட்டும் தான் 90முறை 18 லட்ச ரூபாய் வரை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அந்த அடிப்படையில் பத்து நொடிகளுக்குள் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எவ்வாறு ஏடிஎம் கேஷ் டெபாசிட் மெஷினிலிருந்து கொள்ளையடித்தான் என்பதை அமீர் விளக்கிக் கொண்டே நடித்துக் காட்டினான். இதை காவல்துறையினர் வீடியோ பதிவும் செய்து கொண்டனர்.
இருப்பினும் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த மறுநாள் முதல் இந்தியா முழுவதும் கேஷ் டெபாசிட் மிசின்களில் பணம் எடுப்பது தடை விதிக்கப்பட்ட காரணத்தால், பெரியமேடு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் மட்டும் கேஷ் டெபாசிட் மிஷினில் பணம் எடுக்கும் வசதியை செயல்பட வைத்து, மீண்டும் கொள்ளையன் அமீர் மூலம் நடித்துக் காட்ட வைத்து வீடியோ பதிவும் செய்தனர்.
இதனிடையே இரண்டாவதாக கைது செய்யப்பட்ட கொள்ளையன் வீரேந்திரன் ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தரமணி காவல்துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை(ஜூன்.29) வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் மூன்றாவதாக கைது செய்யப்பட்ட கொள்ளையன் நசீம் ஹுசைனை ஹரியானாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கல்குவாரி குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு