சென்னை: கோயம்பேடு மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்று முன்தினம்(ஜூன்.23) இரவு பணி முடிந்து தனது ஹோண்டா சிட்டி காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கும்பல் மணிகண்டனின் கார் கண்ணாடிகளை இரும்பு ராடாலும், கைகளாலும் அடித்து உடைத்துள்ளனர். மேலும் அங்கிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தனது வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக வைத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் மணிகண்டன் நேற்று(ஜூன்.24) புகார் அளித்துள்ளார்.அதன்பேரில் வாகனங்களை சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.