கரூர்: கடந்த மே 20ஆம் தேதி இரவு, கரூர் அமராவதி ஆற்றுப்பாலம், திருமாநிலையூர் சோதனைச்சாவடியில் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக காவலர்கள் இருசக்கர வாகனங்களை கரூர் நகர்ப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதனால், இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை வந்த வழியிலேயே அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், அன்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி காவலர்கள் மீது வீச முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள மின் கம்பியின் மீது பட்டு பாட்டில் கீழே விழுந்தது. அதனைத் தொடர்ந்து, குற்றாவாளிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று (மே.22) மாலை திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (22), கதிரேசன் (21), இவர்களுடன் மைனர் ஒருவரையும் விசாரித்ததில், காவல் துறையினர் வாகனத்தில் சுற்ற அனுமதி வழங்காததால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, பெட்ரோல் குண்டு தயாரித்து வீசியதை மூவரும் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, காவலர்கள் மூவரையும் கைது செய்து இன்று மாலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜெயசூர்யா என்ற இளைஞரை பசுபதிபாளையம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ராஜாராம் மோகன் ராய்' - இந்தியச் சமூகத்தில் சீர்திருத்தத்தை விதைத்த முதல் குரல்