மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கீழதேனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைக்கண்ணன் என்பவர் தனது வயலில் விளைவித்த 172 நெல் மூட்டைகளை அருகிலுள்ள கொண்டல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டு வந்துள்ளார்.
அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மூட்டைக்கு ரூ.40 வீதம் ரூ.6 ஆயிரத்து 980 கூடுதலாக ரூ.20 சேர்த்து மொத்தம் ரூ.7000 கொடுக்க வேண்டுமென கொள்முதல் பில் கிளார்க் இளங்கோ (36) என்பவர் கேட்டுள்ளார்.
இந்நிலையில், பில் கிளார்க் கேட்ட தொகையை கொடுக்க மனமில்லாத துரைக்கண்ணன் இதுகுறித்து நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய பணத்தை துரைக்கண்ணன் பில் கிளார்க் இளங்கோவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான காவல்துறையினர், கையும் களவுமாக லஞ்ச பணத்துடன் இளங்கோவை கைது செய்தனர். பின்னர், இளங்கோவை நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.