திருவள்ளூர்: திருவாலங்காடு அடுத்த சின்ன களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிரதீப்(30). இவரது மனைவி வனிதா(26). இவரை பிரசவத்திற்காக கடந்த ஜூலை 22ஆம் தேதி திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களில் வீட்டிற்கு செல்ல இருந்த நிலையில், மருத்துவமனையில் பணியில் இருந்த மணிமாலா என்ற செவிலி வனிதாவிற்கு டாக்ஸிம் (Taxim) அலர்ஜி ஊசி போட்டதாக கூறப்படுகிறது. நலமாக இருந்த வனிதாவிற்கு திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார்.
மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வனிதா நேற்று(ஜூலை.26) உயிரிழந்தார்.
தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் வாங்காமல், வனிதாவின் உயிரிழப்பிற்கு மருத்துவமனை மருத்துவர்களின் கவன குறைவே காரணம் என குற்றஞ்சாட்டி, பிறந்த மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் வந்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகாரளித்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை முதல்வர் அரசியிடம் கேட்டபோது, நடந்தது உண்மைதான். மற்ற நோயாளிக்கு செலுத்த வேண்டிய ஊசியை செவிலி தவறுதலாக வனிதாவுக்கு செலுத்திவிட்டார் என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவந்ததால், இந்த தவறை செய்த செவிலியைஉடனடியாக சஸ்பெண்ட் செய்ய மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டார்.