சென்னை: சேப்பாக்கம் கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த அறையில் இருந்த குழந்தைகள் எவ்வித காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில் கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. எப்போதுமே பரப்பரப்பாக காணப்படும் இம்மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் பிரசவப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
அந்த அறையில் திடீரென குளிர்சாதன இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அறையில் தீ பற்றி பரவத் தொடங்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட தாய்மார்கள் ’தீ.. தீ’ என்று அலறத் தொடங்கினர். சிலர் பெற்றெடுத்த குழந்தைகளை எடுத்துக் கொண்டு ஓடினர்.
துரிதமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம், மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு, 34 பச்சிளம் குழந்தைகளையும், இன்குபேட்டரில் இருந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு வேறு அறைக்கு மாற்றினர்.
விபத்து குறித்து திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்த தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயநல அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட அறையை பார்வையிட்டனர். பொது மக்களின் நலனையும் விசாரித்து சென்றனர். இந்த தீ விபத்தினால் மருத்துவமனை வளாகம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.