சென்னை: கொளத்தூர் பகுதியில் வசிக்கும் 21 வயது பெண் ஒருவர் மாடலிங் துறையில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு செல்போன் மூலம் அறிமுகமான Event Manager ரஞ்சித் என்பவர் அந்தப் பெண்ணை சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறி நட்பாகப் பழகிவந்தார்.
மேலும் ரஞ்சித் அடிக்கடி அந்தப் பெண்ணை செல்போன் மூலம் தொடர்புகொண்டு சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறி தொந்தரவு செய்துவந்துள்ளார். ரஞ்சித்தின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்தப் பெண் அவரின் தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இந்நிலையில் ரஞ்சித் தனது பெயரை தீக்ஷ்குப்தா என பெண் பெயராக மாற்றிக்கொண்டு வேறொரு செல்போன் எண் மூலம் அந்தப் பெண்ணிடம் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி தொடர்புகொண்டு, தான் மாடலிங் துறையில் இருப்பதாகவும், உங்கள் மாடலிங் புகைப்படத்தை அனுப்புங்கள் எனவும் கேட்டுள்ளார்.
இதனை நம்பிய அந்தப் பெண் தனது மாடலிங் புகைப்படங்களை அனுப்பிவைத்துள்ளார். ரஞ்சித் அந்தப் பெண்ணின் மாடலிங் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து மீண்டும் அவருக்கே அனுப்பியுள்ளார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனக் கூறி மிரட்டிவந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையிடம் இது குறித்து கூறியுள்ளார். உடனே பெண்ணின் தந்தை இது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் பெரும்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த ரஞ்சித்குமார் (26) கைதுசெய்யப்பட்டார்.
மேலும் விசாரணையில் இவர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், சென்னையில் தங்கி வேலை செய்துவருவதும் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து செல்போனைப் பறிமுதல்செய்தனர். இதையடுத்து ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? - ஸ்டாலின் ஆலோசனை