சென்னை: சூளைமேடு அமீர்ஜான் தெருவைச் சேர்ந்தவரும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவருமான விக்டர் என்பவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "சுதாகர் என்ற தரகர் மூலம் ஓஎல்எக்ஸ் தளத்தில் எனது புல்லட் இருசக்கர வாகனத்தை விற்பனை செய்யப் போவதாக விளம்பரம் செய்தேன். அந்த விளம்பரத்தைப் பார்த்து, முகமது நிகால் என்பவர் தொடர்பு கொண்டார்.
சூளைமேட்டில் உள்ள எனது வீட்டிற்கு வந்து, துபாயில் தான் வேலைபார்ப்பதாக தன்னை நிகால் அறிமுகப்படுத்தி கொண்டார். அவரது அடையாள அட்டைகளையும் காண்பித்தார்.
அதன் பின், இரு சக்கர வாகனத்தை ஒரு முறை ஓட்டிப் பார்க்க வேண்டும் என அவர் கேட்டபோது, நண்பர் ஒருவரை பின்னால் அமரவைத்து ஓட்ட அனுமதித்தேன். பின்னர் புல்லட் வாங்க விருப்பம் தெரிவித்து மறுநாள் பணம் எடுத்து வருவதாக நிகால் கூறிச் சென்றார்.
இதனையடுத்து ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டில் இருந்து முகமது நிகால் பணத்துடன் கிளம்புவதாகத் தெரிவித்ததையடுத்து, எனது தரகர் சுதாகர் மூலம் ராயல் என்பீல்ட் புல்லட்டை கொடுத்த அனுப்பினேன். அப்போது தரகர் சுதாகர் வருவதை கண்டுபிடிக்க லைவ் லொக்கேஷன் அனுப்புமாறு நிகால் கூறினார்.
வடிவேல் பாணியில் திருட்டு
அதன்படி லைவ் லொகேஷன் அனுப்பிய நிலையில், அமைந்தகரை கோவிந்தன் தெருவில் தரகர் சுதாகரை, நிகால் சந்தித்து, வாகனத்தை ஓட்டிப்பார்க்க வேண்டுமென கேட்டுள்ளார். அதனை நம்பி புல்லட்டை சுதாகர் கொடுத்தவுடன் வடிவேல் பாணியில் பைக்கை திருடிச் சென்றுவிட்டடார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னதாக அமைந்தகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து கண்காணிப்புக் கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
தகவல் அளித்த தந்தை
அதில், நிகால் பயன்படுத்திய செல்போன் ஐஎம்இஐ எண்ணை காவல் துறையினர் கண்டுபிடித்து, அந்த ஐஎம்இஐ எண் உள்ள செல்போன் மூலம் வேறு எந்தெந்த சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என காவல் துறையினர் பட்டியிலிட்டுள்ளனர்.
அப்போது தனது தந்தையின் சிம்கார்டை நிகால் பயன்படுத்தியது தெரிய வந்ததை அடுத்து, உடனடியாக கேரளாவில் உள்ள முகமது நிகாலின் தந்தையை தொடர்பு காவல் துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, தனது மகன் இதுபோன்று கேரளாவிலும் மோசடியில் ஈடுபட்டதாக நிகாலின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைதான நிகால்
இதனையடுத்து சைபர் கிரைம் காவல் துறையினரின் உதவியுடன் நொளம்பூரில் இருந்த முகமது நிகாலை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, புல்லட்டை விற்று கிடைத்த பணத்தை வைத்து விமானம் மூலம் மும்பை தப்பிச் செல்ல நிகால் முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
முகமது நிகால், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பொறியாளாராக பணிபுரிந்து வருகிறார். வசதியாக வாழ்ந்து வரும் நிகால் எம்.சி.ஏ படிப்பு முடித்து துபாயில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், மீண்டும் இந்தியா வந்தபோது சென்னையில் வேலை தேடி வந்துள்ளார்.
சொகுசு வாழ்க்கைக்காக திருட்டு
ஆனால், வேலை கிடைக்காததால் கேரளாவில் மோசடி செய்து புல்லட்டை திருடியும், அதேபோல் சென்னையில் திருடி சம்பாதிக்கவும் திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஓஎல்எக்ஸ் தளத்தில் விலை உயர்ந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் விளம்பரங்களை பட்டியலிட்டு திருட திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி தான் வசிக்கும் இடத்திற்கு அருகே இருக்கும் புல்லட் விளம்பரத்தை வைத்து அரும்பாக்கத்தில் உள்ள விக்டரை தொடர்பு கொண்டதாகவும் நிகால் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், புல்லட் விளம்பரம் செய்யும் உரிமையாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசியும், துபாயில் வேலை பார்ப்பதாக தனது அடையாள அட்டையை காட்டியும் நம்ப வைத்து திருடியதாக நிகால் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஏற்கனவே இதேபோன்று புல்லட்டை திருடி கைதானதாகவும், அதே பாணியில் திருடி சம்பாதிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், ஓஎல்எக்ஸ் விளம்பரத்தின் மூலம் புல்லட்டைத் திருடி, அதே தளத்தில் விளம்பரம் செய்து பைக்கை விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர், நிகாலிடமிருந்து புல்லட்டை மீட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.