திருவண்ணாமலை: விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 145லிட்டர் கள்ளச்சாராயத்தினை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
நல்லவன்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. அசோக்குமார் தலைமையில் மதுவிலக்கு பிரிவு அலுவலர்கள் இன்று (பிப்.12) காலை நல்லவன்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு கொட்டகையில் 145 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் சாராயத்தைப் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தியதில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வைத்தீஸ்வரி (27), நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா(34), தண்டராம்பட்டு தாலுக்கா தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (48) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.