ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டகாரரான விராட் கோலியின் 10 மாத மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த 23 வயது இளைஞரை மும்பை காவல் துறையினர் ஹைதராபாத்தில் கைது செய்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை புரிந்தது. இதையடுத்து இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்திய வீரர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், விராட் கோலியின் 10 மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு ட்விட்டர் மூலம் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லி மகளிர் ஆணையமும், டெல்லி காவல்துறையைக் கேட்டுக் கொண்டிருந்தது. இதன்படி, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் துரிதமாக விசாரணை மேற்கொண்டனர். சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் விசாரணை வேகமெடுத்தது.
இதில், பாலியல் மிரட்டல் விடுத்த நபரை மும்பை காவல் துறையினர் ஹைதராபாத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தானில் இருந்து கணக்கை இயக்குவது போன்ற தோற்றத்தை ராம்நாகேஷ் அலபத்தினி (23) ஏற்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் சைபர் கிரைம் மேற்கொண்ட துல்லிய விசாரணையின் மூலம் இவர் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர் மென் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விராட் குழந்தைக்கு பாலியல் மிரட்டல்