சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி சர்வதேசப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, சமூக வலைதளங்களில் பள்ளி மாணவிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது போக்சோ உட்பட 9 பிரிவுகளின் கீழ் 3 தனித் தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் சுஷில் ஹரி பள்ளியில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சிவசங்கர் பாபா காவல் துறையினர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார்கள் வர தொடங்கியே போதே பெண் பக்தர் ஒருவருடன் வேறு மாநிலத்திற்கு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் டேராடூனில் மாரடைப்பு காரணமாக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தனர். இச்சூழலில், ஜூன் 13ஆம் தேதி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாறியது. சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்து வந்த சிவசங்கர் பாபாவின் கைபேசி எண்ணை டிராக் செய்ய முயன்ற போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
தீவிரப்படுத்தப்பட்ட சோதனை
இதனையடுத்து சிவசங்கருடன் சென்ற பெண் பக்தரின் கைபேசி எண்ணை ஆராய்ந்த போது உத்தரகாண்ட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் காண்பித்தது. இதனையடுத்து உத்தரகாண்ட் பகுதிக்கு தனிப்படை விரைந்து மருத்துவமனையில் பார்த்த போது சிவசங்கர் பாபா தப்பித்துள்ளார்.
உடன் வந்த பெண் பக்தரின் பெயரில் மருத்துவமனையில் அட்மிஷன் போட்டது தெரியவந்தது. உத்தரகாண்டிற்கு காவல் துறையினர் வருவதாக ஊடக வாயிலாக அறிந்த சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பித்ததும் தெரியவந்தது.
போக்குக்காட்டிய சாமியார்
இதனையடுத்து அந்த பக்தரின் கைபேசி எண்ணை டிராக் செய்த போது பல முறை டெல்லி பாக்தாத்தில் உள்ள சித்தரஞ்சன் பகுதியில் உள்ள ஒரு பக்தருடன் பல முறை பேசியது தெரியவந்தது.
இதனால் வேறு நாட்டிற்கு சிவசங்கர் பாபா தப்பிக்க வாய்ப்பிருந்ததால் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த போது நேபாளத்திற்கு அதிக முறை சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிவசங்கர் பாபா நேபாளத்திற்கு தப்பித்து செல்வதை தடுப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் சிபிசிஐடி காவல் துறையினரால் அனுப்பப்பட்டது.
சிக்கிய பாபா
மேலும், தொடர்ந்து சிவசங்கர் பாபா டெல்லியில் உள்ள பக்தர் ஒருவரின் வீட்டிலிருந்து செல்போன் மூலம் தப்பிப்பது குறித்த ஆலோசனைகளை கேட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக டெல்லி காவல் துறைக்கு தமிழ்நாடு சிபிசிஐடி தகவல் அளித்துள்ளனர். உடனடியாக டெல்லி காவல் துறையினர் சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்குச் சென்று நேபாளத்திற்கு தப்பிக்க முயலும் போது சிவசங்கர் பாபாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் சிபிசிஐடி காவல் துறையினருக்கு இவர் கைது செய்யப்பட்டது குறித்த தகவலை தெரிவித்தவுடன், தனிப்படை சிபிசிஐடி காவல் துறையினர் டெல்லிக்கு விரைந்து டெல்லி நீதிமன்றத்தில் அவரை முன்னிறுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று விமானம் மூலம் சென்னைக்கு இரவு 11.45 மணிக்கு அழைத்து வந்தனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன் பின்பு சிவசங்கர் பாபாவிடம் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது எப்படி? எத்தனை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்? பாலியல் தொடர்பான வீடியோவை படம்படித்து உள்ளாரா என பல கோணங்களில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.