தேனி: அருகே உள்ள வடபுதுப்பட்டியில் சாலையின் நடுவே தனது காரை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தியுள்ளார். இதனால் அந்தப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் காரை ஓரமாக நிறுத்த சொல்ல அதற்கு காரில் வந்த நபர் மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, காரில் இருந்த பெண் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் கார் உரிமையாளரிடம் சண்டை போடவே அவர்களையும் தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து காரின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேனி அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளரின் வாகனத்தை முற்றுகையிட்டு சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம் பேசி கார் உரிமையாளர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். என உத்தரவாதம் அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:11-ஆம் வகுப்பு மாணவிக்கு கத்தி குத்து - வாலிபர் தப்பியோட்டம்