சென்னை: வேளச்சேரியைச் சேர்ந்த சிறுமியின் தந்தை தனது 17 வயது மகளைக் காணவில்லை எனக் கூறி, ஜனவரி 29ஆம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமியினுடைய தோழியின் தந்தை சுரேஷ் (38) அச்சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட மேல் விசாரணையில், சுரேஷ், சிறுமியிடம் தனது மனைவிக்கு காசநோய் உள்ளதால் அவருடன் விலகி இருப்பதாகவும், சிறுமியை காதலிப்பதாகவும் என பலவித ஆசைவார்த்தைகளைக் கூறி வேளச்சேரி பகுதியிலேயே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியை தங்கவைத்து அவருடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியைக் காணவில்லை எனப் பதியப்பட்ட வழக்கை போக்சோ வழக்காக மாற்றிய வேளச்சேரி காவல் துறையினர், சுரேஷை கிண்டி அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து சுரேஷை போக்சோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே வேளச்சேரி வீட்டிலிருந்து சிறுமி மீட்கப்பட்டு கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய கவுன்சிலிங் அளிக்கப்பட்டுவருவதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இறந்தவரின் கையெழுத்தைப் போட்டு ரூ. 5.5 கோடியை வாரிசுருட்டியவர் கைது