தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை தடுக்க முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
இதனால், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, வெளி மாநிலங்களிலிருந்து மதுபான பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்வது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (மே 31) மாலை சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த செட்டிப்பட்டி பரிசல் துறைக்கு, கர்நாடக மாநிலத்திலிருந்து ஆற்றின் வழியாக பரிசல் மூலம் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கொளத்தூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில், கொளத்தூர் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான காவல்துறையினர் செட்டிப்பட்டி பரிசல் துறையில் ஆய்வு செய்தனர்.
அப்போது, தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த சக்திவேல் (26), கோவிந்தராஜ் (32), மணி (25), கர்நாடக மாநிலம் செங்கப்பாடியைச் சேர்ந்த கணேசன் (18) ஆகிய நான்கு பேர் பரிசலில் 27 பெட்டிகளில் அடைக்கப்பட்ட ஆயிரத்து 296 மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள், பரிசல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.