சென்னை: மகன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக் கத்திகளுடன் காத்திருந்த தந்தை உள்பட நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பல்லாக்கு பகுதி அரசு மதுபான கடை அருகே ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சரவணன் (25) என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணிகண்டன், ஷாம், அஜித், விஜய் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் 4 நபர்களைக் கொலை செய்ய, இறந்த இளைஞரின் குடும்பத்தினர் திட்டம் தீட்டி வருவதாக நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் மயிலாப்பூர் காவல் துறையினர் நொச்சி நகரில் வசிக்கும், கொலை செய்யப்பட்ட சரவணனின் தந்தை முருகேசன், சகோதரர் முருகன், கார்த்திக், பிரவீன்குமார் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இறந்துபோன தனது மகனை கொலை செய்த நபர்கள் பிணையில் வெளிவந்தவுடன், கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக சரவணனின் தந்தை ஒப்புக்கொண்டார்.
மேலும், கொலை செய்வதற்காகக் கண்ணகி நகரைச் சேர்ந்த சுனாமி சுரேஷிடம் நாட்டு வெடிகுண்டுகள், செம்மெஞ்சேரியைச் சேர்ந்த கார்த்திக்கிடம் பட்டாக் கத்திகள் வாங்கி வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது..
இதனையடுத்து, இவர்களிடமிருந்த நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக் கத்திகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் நான்கு பேரிடமும் மயிலாப்பூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- இதையும் படிங்க: மனம் திருந்தி ஆட்டோ ஓட்டிவந்த முன்னாள் ரவுடி வெட்டிக்கொலை