கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயியான இவருக்கு குன்னாத்தூர் கிராமத்தில் நிலம் உள்ளது. அதில் மின்சார மோட்டாருடன் கூடிய கிணறும் உள்ளது.
இந்த கிராமத்தில், விநாயகர் சதூர்த்தியை மும்பையில் கொண்டாடுவதுபோல வெகு விமரிசையாக கொண்ட, அங்குள்ள இளைஞர் ராஜ்குமார், அவரது நண்பர் காளிமுத்து மற்றும் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து முடிவு செய்துள்ளனர். விழாவை சிறப்பாக நடத்த பணத்தை ஏற்பாடு செய்ய நினைத்துள்ளது நண்பர்கள் குழு.
இதற்கிடையில், கிராமத்திலுள்ள இரண்டு விவசாய நிலங்களில் குளிக்கச் செல்லும்போது அங்கு மின் மோட்டார் இருப்பதை பார்த்தது நியாபத்திற்கு வந்துள்ளது. உடனடியாக ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும், மின்மோட்டாரை உடைத்தெடுத்து அதனை உளுந்தூர்பேட்டையில் விற்பதற்காக, மினி டெம்போ வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மின் மோட்டார் ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது நண்பர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளனர்.இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் நான்கு பேரையும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் நடந்த உண்மைகளை நண்பர்கள் குழு ஒத்துக்கொண்டனர் .
இதனைத் தொடர்ந்து மோட்டார் திருடப்பட்ட இடம், திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர், மினி டெம்போ, மின் மோட்டார் ஆகியவற்றை திருநாவலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த திருநாவலூர் காவல்துறையினர் ராஜ்குமார் காளிமுத்து ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விழுப்புரம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: முறைகேடாக சொத்து சேர்த்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு