மும்பை : மனதை பதை பதைக்கச் செய்யும் இந்தக் கொடூரச் சம்பவம் லக்னோவில் இருந்து மும்பை சென்ற புஷ்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்தது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை (அக்.8) இரவு மலைப்பகுதியான மகாராஷ்டிராவின் இகாட்புரி பகுதியை கடந்தது.
இந்நிலையில் ரயிலில் இருந்த 8 பேர் கொண்ட கொள்ளையர்கள் கும்பல் அங்கிருந்த பயணிகளை துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டினார்கள்.
கூட்டுப் பாலியல் வன்புணர்வு
தொடர்ந்து அவர்களிடமிருந்த செல்போன், ரொக்கப் பணம் மற்றும் எடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டனர். இந்த நிலையில், அங்கிருந்த 20 வயதான இளம்பெண்ணை மாறி மாறி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதைத் தட்டிக்கேட்ட சக பயணிகளை கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். இந்நிலையில் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.
வழக்குப்பதிவு
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கல்யாண் ரயில்வே காவலர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 395 (ஆயுதங்களை காட்டி கொள்ளை), 397 (கொள்ளை, ஆயுதங்களை காட்டி மிரட்டல்), 376 (D) கூட்டு பாலியல் வன்புணர்வு, 354 (பெண்ணை தாக்கி காயம் ஏற்படுத்துதல், மானபங்கம்), 354(B) (பெண்ணை தாக்கி அவளை ஆடையின்றி கொடுமைப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழு் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் ரயில்வே பயணச் சட்டம் ம், போலியான பயணம் (137) மற்றும் சக பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் (153) உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் ஆணையர் ட்வீட்
இந்த வழக்கு குறித்து மும்பை காவல் ஆணையர் கைசர் காலித் (Quaiser Khalid) தனது தொடர்ச்சியான ட்வீட்டில், “அவுரங்காபாத் ரயில்வே மாவட்டத்தில் உள்ள இகாட்புரி ரயில் நிலையத்தில் குற்றவாளிகள் ஏறியிருக்கலாம். குற்றவாளிகள் தாக்க முயற்சித்ததும், பயணிகள் உதவிக் கோரினர். அவர்களுக்கு உரிய உதவிகள் அளிக்கப்பட்டன.
இந்தக் குற்றம் குறித்து குற்றவியல் அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். பயணிகளிடமிருந்து ரூ.96 ஆயிரத்து 390 மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் செல்போன்கள் ஆகும். இதில் ரூ.34 ஆயிரத்து 200 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன.
நால்வர் தலைமறைவு
இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகவுள்ள 4 பேரை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. குற்றவாளிகளின் முந்தைய குற்ற பதிவேடுகளையும் ஆய்வுக்கு உட்படுத்திவருகிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் அலுவலர் துணையுடன் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலதிபர் - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு