சென்னை: சோழிங்கநல்லூரில் நலம் ஹெல்த் கேர் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருபவர் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் குமார்(28). இவர் நேற்று முன் தினம் கிளினிக்கில் இருந்த போது மர்ம நபர்கள் நான்கு பேர் உள்ளே புகுந்து மருத்துவர் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தியதில் லேசான காயம் ஏற்பட்டது. பணம் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு போலீசில் சிக்காமல் இருக்க சிசிடிவியை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
அப்போது பொதுமக்கள் ஒருவனை பிரகாஷ்(38), மட்டும் விரட்டி பிடித்து அடித்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் மருத்துவரிடம் புகாரை பெற்ற ஆய்வாளர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்த நிலையில் நீலாங்கரை அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு போலிசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது அவர்கள் கையில் துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ந்து போன போலீசார் துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20000 ரூபாய் பணம், ஏர் கன் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் கடலூரைச் சேர்ந்த பிரகாஷ்(38), பிரதாப்(35), சத்யசீலன்(36), வெற்றி செல்வன்(35) என்பதும் கடந்த 5 ஆண்டுகளாக வழிப்பறியில் ஈடுபட்டு வருவதும், பணம் இருக்கும் நபர்களைக் குறிவைத்து வழிப்பறி செய்பவர்கள், கடலூரில் உதவி ஆய்வாளரிடமே துப்பாக்கி காட்டி மிரட்டித் தப்பி சென்றுள்ளனர்.
இவர்கள் மீது பல வழக்குகள் கடலூரில் இருப்பதும் தேடப்படும் குற்றவாளிகள் என தெரியவந்தது. பின்னர் அனைவரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வரும் 6ம் தேதி வரை சிறையில் அடைக்க மெஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பொருளாதார ஆய்வறிக்கை கூட்டம்: அதிமுக சார்பில் ரவீந்திரநாத் எம்.பி.க்கு அழைப்பு