திருநெல்வேலி: தின்பண்டத்திற்கு காசு கொடுக்காமல் சென்ற 10 வயது சிறுமியை, வளர்ப்பு தந்தை தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ், தனது மனைவியுடன் சேர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அந்தோணிராஜ் மனைவி சுஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இவரது கடைசி மகள், பணக்குடி பகுதியில் உள்ள அடுமனை கடைக்கு சென்று தின்பண்டங்களை எடுத்ததாகக் கூறப்படுகிறது. காசு கொடுக்காமல் சிறுமி தின்பண்டங்களை எடுத்துச் சென்றது குறித்து அடுமனை உரிமையாளர், வளர்ப்பு தந்தை அந்தோணிராஜிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதற்கான தொகையைக் கொடுக்காமல், தின்பண்டங்களை எடுத்ததற்காக வீட்டிற்கு சென்ற அந்தோணிராஜ், குழந்தைகள் மூவரையும் அழைத்து அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார். இதில், சுதாரித்துக்கொண்ட மூத்த வளர்ப்பு மகள்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
ஆனால், 10 வயதே நிரம்பிய கடைக்குட்டி மகள் மீது தீ வைத்து கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் அந்தோணி. அப்போது சிறுமி ‘அப்பா... அப்பா ... என்னை காப்பாத்துங்க’ என்று அலறியபடி, அந்தோணிராஜை அணைத்துள்ளார். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், 90 விழுக்காடு தீக்காயங்களுடன் கிடந்த சிறுமியை மீட்டு பணக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வளர்ப்பு தந்தையும் சிறிய தீக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து பணக்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தோணிராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இச்சூழலில், சிகிச்சைபெற்று வந்த சிறுமி, கன்னியாகுமரி மாவட்ட ஆசாரிப்பள்ளம் தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், இன்று சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனடியாக, மருத்துவமனை விரைந்த பணக்குடி காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து கொலையாளி அந்தோணிராஜ் மீது போடப்பட்ட கொலைமுயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்துள்ளனர்.
தின்பண்டத்திற்காக பிஞ்சிளம் சிறுமி என்றும் பாராமல், வளர்ப்பு தந்தையே தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்' - மாணவியின் கண்ணீர் கடிதம்!