மயிலாடுதுறை: பீரோவை உடைத்து 40 பவுன் நகையைத் திருடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (46). இவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி ஜீவா (38), மகன் கவின் (13) ஆகியோர் இருந்துள்ளனர்.
இவரது வீட்டின் ஒரு பகுதி நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. மீதமிருந்த வீட்டிற்குக் கதவு இல்லை. கிரில் கேட் மட்டுமே உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூன் 16) காலை ஜீவா தனது மகனுடன் வீட்டின் கிரில் கேட்டை பூட்டிவிட்டு தருமகுளம் கிராமத்திலுள்ள அண்ணன் கணேசன் வீட்டில் நடைபெற்ற கறி விருந்துக்கு சென்றுள்ளார்.
பின்னர், இன்று (ஜூன் 17) காலை திரும்பி வந்து பார்த்தபோது கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஜீவா அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 40 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், செம்பனார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மளிகைக் கடையில் திருட்டு : மூவர் கைது