ரோஹ்தக்: மல்யுத்த பயிற்சிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. இதில் ஐவர் உயிரிழந்தனர். குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட இருவருக்கு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றுக்கு அருகில் மேகர் சிங் அஹதா மல்யுத்த பயிற்சிக் கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.12) இரவு துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பயிற்சியாளர், பெண் மல்யுத்த வீராங்கனைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். உடலில் குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் தொழில் போட்டி காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் எனக் காவலர்கள் கூறினர்.
மேலும் இதுகுறித்து விசாரணைக்கு பின்னரே பதிலளிக்க முடியும் என்றும் மூத்தக் காவலர் ஒருவர் தெரிவித்தார். இந்த வழக்கில் ஒருவரும் கைதாகவில்லை. சம்பவ பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கிர்வார் விசாரணை நடத்திவருகிறார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. அவர்கள், மல்யுத்த பயிற்சியாளர் பிரதீப் மாலிக், மல்யுத்த வீராங்கனைகள் பூஜா மற்றும் சாக்ஷி ஆகியோர் ஆவார்கள். இவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது