பஸ்தி (உத்தரப் பிரதேசம்): இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் அளித்த புகாரில் 14 காவலர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா? எனக் காவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் தீபக் சிங் எனக்கு அறிமுகமானார். அவர் என்னிடம் செல்போன் எண் கேட்டார். அவர் காவல் அலுவலர் என்பதால் நானும் நம்பி செல்போன் எண்ணை பகிர்ந்துக்கொண்டேன்.
ஆனால் நாளாக நாளாக அவரின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. எனது செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகள், படங்களை பகிர ஆரம்பித்தார். நான் அவரை எச்சரித்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தீபக் சிங் மற்றும் காவலர் ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள 14 காவலர்கள் மீது விசாரணை நடந்துவருகிறது.