சென்னை: சிறப்பு டிஜிபி மீது, பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் புகாரளித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அப்போது முதலமைச்சருடன் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸும் பாதுகாப்புக்காகச் சென்றுள்ளார்.
பின்னர் பணிகள் முடிந்து அலுவலர் ராஜேஷ் தாஸ் சென்னைக்குத் திரும்பும் போது, அந்த மாவட்ட ஐபிஎஸ் அலுவலர்கள் வரவேற்று உபசரித்து அனுப்பினர். அப்போது பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவரை அழைத்துச் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த பெண் அலுவலர் உடனே காரை விட்டு இறங்கிச் சென்றிருக்கிறார்.
இச்சூழலில், பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி பொறுப்பிலுள்ள அலுவலர் மீது பெண் ஐபிஎஸ் அலுவலர் காவல்துறை இயக்குநர் திரிபாதி, உள்துறை செயலாளரிடம் புகாரளித்துள்ளார். அப்புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் அலுவலர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே, மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது இதேபோன்று பாலியல் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணிக்குத் திரும்பியவர் ராஜேஷ் தாஸ் என்பது நினைவுகூரத்தக்கது.
இச்சம்பவம் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், அதிமுக ஆட்சியில் காவல் உயர் அலுவலருக்கே பாதுகாப்பு தேவைப்படுவதாகவும், பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவர், உயர் அலுவலரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதைக் கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
விசாகா குழு மீண்டும் அமைக்கப்படுமா?
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013இன் படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது விதி. பத்து ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என உத்தரவுள்ளது.
இந்த விசாகா குழுவின் தலைவராகப் பெண் அலுவலரை நியமனம் செய்து, சட்ட வல்லுநர், பெண் உரிமை செயற்பாட்டாளர் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். விசாகா குழு அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையில் இதற்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையில் பெண் அலுவலர் ஒருவருக்கு உயர் அலுவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தபோது, கூடுதல் டிஜிபி பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு அந்தக் குழு கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு மீண்டும் தற்போது விசாகா குழு அமைப்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.