திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த நேதாஜி நகர் பகுதியில் ஆற்றுப்பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் முழுவதும் எரிக்கப்பட்டு கை, கால்கள் மட்டும் சிதைந்த நிலையில் காவல் துறையினர் மீட்டனர்.
அவ்வழியாகச் சென்ற ஊர் பொதுமக்கள் துர்நாற்றத்துடன் குப்பை எரிந்து வருகிறது என நினைத்து பாலத்தின் கீழ் எட்டி பார்க்கையில், பெண்ணின் உடல் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மேகலாவுக்கு தகவல் கிடைக்க, ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சிம்பா, பிரேதத்தின் அருகே இருந்த புடவையை முகர்ந்து விட்டு, சில கிலோ மீட்டர் தூரம் குற்றவாளியை தேடி ஓடிச் சென்றது.
பின்பு எரிந்த நிலையில் கிடந்த உடல் பாகங்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.