கடலூர்: குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் காணொலி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (38) என்பவருக்கும், முதுநகர் பகுதியைச் சேர்நத பிரியா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழ்ச்செல்வனின் தாய், தந்தையும் இவர்களுடன் வசித்துவந்துள்ளனர்.
தமழ்ச்செல்வன்-பிரியா தம்பதியினருக்கு, 3 வயதில் சுவேதா என்ற மகளும், ஒரு வயதுடைய ஆண் குழந்தையும் உள்ளது. தமிழ்ச்செல்வன் தனது தாய், தந்தை உறவினருடன் ஒரே வீட்டில் வசித்துவந்தார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கருவுற்ற பிரியா இரண்டாவது குழந்தை பெற்றெடுக்க தனது அம்மா வீடான கடலூர் முதுநகருக்குச் சென்றுள்ளார். அப்போது தமிழ்ச்செல்வன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஒரு ஆண்டுக்குப் பின்னர் கடலூர் திரும்பியுள்ளார்.
அப்போது மனைவி வீட்டிற்கு வரவில்லை என்ற செய்தியை அறிந்துள்ளார். உடனடியாக மனைவி பிரியாவை அழைத்து வர மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது பிரியா உங்கள் அப்பா, அம்மாவுடன் சேர்நது என்னால் இருக்க முடியாது, தனிக்குடித்தனம் சென்றால் வீட்டிற்கு வருகிறேன். இல்லையென்றால் வரவில்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் தமிழ்ச்செல்வன் கடந்த ஒருவாரமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு தனது வீட்டில் மிக உருக்கமான ஒரு காணொலியைப் பதிவுசெய்துவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
அதில் பேசியிருக்கும் அவர், "பிள்ளைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் திரும்பி குழந்தையாகப் பிறந்து வருவேன். எனது அக்கா, அம்மா, அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் என் மனைவியை அழைத்தபோது வரவில்லை" என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இறந்த தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.