திண்டுக்கல் : போலி மருத்துவர்கள் தொடர்பாக அதிக புகார்கள் வந்ததையடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் உத்தரவிட்டார்.
அதன்பேரில், நலப்பணிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு சாணார்பட்டி, நத்தம், குஜிலியம்பாறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நலப்பணிகள் இணை இயக்குநர் சிவக்குமார் தலைமையில் ஒரு குழு சாணார்பட்டி பகுதியிலும், துணை இயக்குநர்கள் மா.ராமச்சந்திரன்(காசநோய்), ரூபன்(தொழுநோய்) ஆகியோர் தலைமையிலான குழுவினர் நத்தம்,செந்துறை பகுதிகளிலும், துணை இயக்குநர் பூங்கோதை(குடும்ப நலம்) தலைமையிலும், துணை இயக்குநர் ஜெயந்தி(சுகாதாரப் பணிகள், பழனி) தலைமையிலும் இரண்டு குழுக்கள் குஜிலியம்பாறை சுற்றுப்புற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
போலி மருத்துவர் கைது:
இந்நிலையில் சாணார்பட்டி வட்டம் வேம்பார்பட்டி அடுத்த அய்யாபட்டியில் வீட்டில் கிளினிக் நடத்தி வந்த காளியப்பன்(54) என்பவரை சாணார்பட்டி காவல்துறையினர் கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இவர் அமமுக சாணப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்துறையில் எச்சரிக்கை:
நத்தம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள், வத்திப்பட்டி, செந்துறையில் இரண்டு பேர் மருத்துவமனை வரையரை சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் சிகிச்சை அளிப்பதை கண்டறிந்தனர். அந்த இரு கிளினிக் உரிமையாளர்களையும் எச்சரித்த அலுவலர்கள், பதிவு செய்யத் தவறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க : கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் - கர்நாடக அரசு