சென்னை எழும்பூரிலுள்ள நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வருபவர் குட்டியப்பன்(50). இவர் நேற்று (மே26) பணியிலிருந்தபோது, சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கிய பணிநியமன ஆணை காட்டி பணியில் சேர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக, நீதிமன்ற தலைமை எழுத்தர் குட்டியப்பன் பணி நியமன ஆணையை வாங்கி பரிசோதித்த போது, அது போலி எனத் தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து எழும்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பணி நியமன ஆணை போலியானது என்பதை உறுதி செய்தனர்.
அரசு முத்திரை, நீதிபதி கையெழுத்து, அரசு பணியாளர் தேர்வாணைய உத்தரவை அனைத்தையும் வைத்து போலி பணி நியமன ஆணை தயார் செய்திருப்பது தெரியவந்தது.
மேலும், ஆணையில் இருந்த நீதிபதியின் கையெழுத்து, ஓய்வு பெற்ற நீதிபதியினுடையது என்பதும் தெரியவந்தது. உடனடியாக, காவல் துறையினர் சுதர்சனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகரன்(35) என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு வாங்கித் தருவதாக கூறி 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு போலி ஆவணம் வழங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து, வேலூர் சென்ற காவல் துறையினர், வழக்கறிஞர் ராஜசேகரனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போலி வழக்கறிஞர் என்பது தெரிய வந்தது. ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தின் முத்திரையும், நீதிபதியின் கையெழுத்தையும் மோசடியாக உருவாக்கி செய்து பணி நியமன ஆணையை தயார் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சுதர்சனை சாட்சியாக்கி காவல்துறையினர் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, போலி வழக்கறிஞர் ராஜசேகரனை எழும்பூர் காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.