பெங்களூரு: காதலருக்கு உதவியாக இருந்து கஞ்சா கடத்திய பெண் பொறியாளர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட ரேணுகா ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் வசிப்பவர். அவரது காதலன் சித்தார்த் ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருவரும் படித்தபோது நண்பர்களாக இருந்துள்ளனர்.
வெகுசில நாள்களில் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் காதலித்தனர். இச்சூழலில், சித்தார்த் ஒரு போதைப்பொருள் விற்பனையாளராக மாறியதாகவும், ரேணுகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
தனது சம்பளம் மிகக் குறைவு என்றும் தன் குடும்பத்திற்கு உதவ முடியவில்லை என்றும் ரேணுகாவுக்கு எண்ணம் தோன்ற, காதலுடன் சேர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.
இச்சூழலில், இருவரும் ஒடிசாவிலிருந்து கஞ்சாவை வாங்கி விசாகப்பட்டினத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக சோதனை நடத்திய காவல் துறையினர், ரேணுகா, சுதான்ஷு (சித்தார்த்தின் நண்பர்) ஆகிய இருவரிடமும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை உறுதிசெய்தனர். அவர்களிடமிருந்து 2,500 கிராம் கஞ்சா, ரூ. 6,500 ரொக்கம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், காதலன் சித்தார்த்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.