சென்னை: தேசிய பல் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினரான மருத்துவர் முருகேசன், தமிழ்நாட்டின் உள்ள ஆசான் நினைவுப் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இரு தனியார் மருத்துவமனைகள் தொடங்குவதற்கு 25 லட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்ற விவகாரத்தில், 2013ஆம் ஆண்டு அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவை விசாரணை நடத்திவரும் நிலையில், சிபிஐ பதிவுசெய்த வழக்கின் அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், மருத்துவர் முருகேசனுக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான 21.11 லட்சம் ரூபாயை முடக்கியுள்ளனர்.
வங்கி கணக்கில் முதலீடா?
மேலும், அமலாக்கத் துறை இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தியபோது, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க பெற்ற கையூட்டுப் பணத்தை தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து, தான் நடத்திவரும் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் முருகேசன் முதலீடு செய்தது தெரியவந்தது.
அதனுடைய மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் முருகேசனின் தனியார் மருத்துவமனையின் 21 லட்ச ரூபாய் பணத்தை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றுவருவதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அனைத்து ஸ்பா, மசாஜ் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை