சென்னை: அதிமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர்கள், சில அரசு அலுவலர்கள் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அந்த அடிப்படையில் அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் சிக்கினர். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடப்பது இது ஐந்தாவது முறை.
அதன்படி, எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் இன்று (டிசம்பர் 15) சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
69 இடங்களில் ரெய்டு
இந்நிலையில், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட முழுவதும் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 14 இடங்களிலும் மற்ற ஒன்பது மாவட்டங்களில் குறிப்பாக, நாமக்கல், ஈரோடு, வேலூர், சேலம், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் சோதனையானது நடைபெற்று வருகிறது. 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமைச்சர் பதவியில் 10 ஆண்டுகள்
தங்கமணிக்கு லதா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவரது கணவர் தினேஷ்குமார் ஆவார். முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு, நாகரத்தினம், கிருஷ்ணவேணி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். நாகரத்தினம், லோகநாதன் என்பவரையும் கிருஷ்ணவேணி, துரைசாமி என்பவரையும் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தங்கமணி சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். மறைந்த தந்தை பெருமாள் சிறிய அளவிலான டெக்ஸ்டைல் தொழில் செய்துள்ளார். முன்னாள் அமைச்சரான தங்கமணி தற்போது குமாரபாளையம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
முன்னதாக 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திருச்செங்கோடு எம்எல்ஏவாகவும், 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை குமாரபாளையம் எம்எல்ஏவாகவும் இருந்தார். 2011, 2012ஆம் ஆண்டுகளில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2012 முதல் 2016ஆம் ஆண்டுவரை தொழில் மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார்.
வேட்பு மனு மூலம் அம்பலம்
சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில், அதாவது 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தன் பெயரிலும், தன் உறவினர்கள் பெயரிலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி வேட்புமனு தாக்கல் செய்யும் போது இணைக்கப்பட்ட சொத்து மதிப்பையும், 2016ஆம் ஆண்டு தேர்தலில் நிற்கும் போது தாக்கல் செய்த வேட்பு மனு உடன் இணைக்கப்பட்ட சொத்து மதிப்பையும் கணக்கிட்டு பார்க்கும்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், இதையடுத்து, வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி முருகன் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதில் இருந்து சம்பாதித்து வருவதாகவும் கணக்கு காட்டியுள்ளார். ஆனால், பெயரளவிலேயே அந்த நிறுவனம் இருப்பதாகவும், முறைகேடாக சம்பாதித்த பணத்தை மறைப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வருமானம்
தங்கமணியின் மனைவி சாந்தி பெயரில் எந்தவித தொழில்களும் நடைபெறவில்லை. இருப்பினும், முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் ஆகியோர் சட்டத்தின் பார்வையில் இருந்து மறைத்து வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2016-2021 காலக்கட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் பெயரில் உள்ள சொத்துக்களை கணக்கிட்டு பார்க்கும்போது, 2016 வேட்பு மனுவில் மேற்குறிப்பிட்டோரின் சொத்து மதிப்பு ஒரு கோடியே ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 17 ரூபாயாகவும், 2021இல் 8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 318 ரூபாயாகவும் இருந்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில், மூவரும் சம்பாதித்ததாக கூறப்படும் வருமானம் 5 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 617 ரூபாயாகும். 2016-2021இல் செலவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு பார்க்கும் பொழுது இரண்டு கோடியே 64 லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து 335 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 4.85 கோடி சொத்து குவிப்பு
ஆனால், 2016-21இல் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்பட மூவரும் வைத்துள்ள உண்மையான சொத்து மதிப்புகளை கணக்கிட்டுப் பார்க்கும்போது, 7 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து முன்னூற்றி ஒரு ரூபாய் சொத்துக்கள் இருப்பது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இவர்கள் செலவு செய்த தொகை சுமார் 2 கோடியே 60 லட்சத்து 8282 ரூபாய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கண்டுபிடிக்கப்பட்ட சொத்து மதிப்பு மற்றும் செலவு கணக்குகளை கணக்கிட்டு பார்க்கும்போது, சுமார் 4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து, விசாரணை செய்ததில் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார், மாண்ட்ரோ நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் சேனலின் இயக்குநராக இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
கிரிப்டோகரன்சியில் மூதலீடு
மேலும், மெட்ராஸ் ரோட் லைன், ஜெயஸ்ரீ செராமிக், ஸ்ரீ பிளை அண்ட் வணீர், ஏஜிஎஸ் டிரான்ஸ் மூவர், ஸ்மார்ட் ட்ரேட் லிங்ஸ், ஸ்மார்ட் டெக், ஸ்ரீ பிளைவுட், இன்ப்ரா ப்ளூ மெட்டல் ஆகிய நிறுவனங்களிலும் பங்குதாரராக இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தினேஷ் குமாரின் தந்தை சிவசுப்பிரமணியன் எம்ஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான லாரிகளை இயங்கி வருகின்றன.
தங்கமணியின் மகளான லதா ஸ்ரீ பெயரில் ஜெயஸ்ரீ பிளைவுட், ஜெயஸ்ரீ பில்ட் புரோ என்ற பெயரில் நிறுவனங்கள் நாமக்கல் பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வருகின்றன.
இதுபோன்று, கணக்கில் வராமல் சொத்துக்களை தங்கமணி தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் தமிழ்நாடு, மற்ற மாநிலங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி முதலீடு செய்து சொத்துக்களை குவித்து இருப்பதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூவர் மீது வழக்கு
இந்த அடிப்படையில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீது நாமக்கல் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்வதற்கும் வழக்கு தொடர்பான விவரங்களை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சோதனையின் முடிவில் முன்னாள் அமைச்சர், உறவினர்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நகை மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிரடி ரெய்டு