கோயம்புத்தூர்: நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாலாமணி என்பவர் கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள வார்டு எண் 5இல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று(பிப்.5) பரிசீலனையின் போது குறித்த நேரத்திற்கு வராத பாலாமணியின் வேட்புமனுவில் பிழை இருந்துள்ளது. இதனால் கிழக்கு மண்டல தேர்தல் அலுவலர் பாலா மணியின் மனுவை நிராகரித்துள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பல்வேறு கட்சிகளின் மனுக்களில் இருக்கும் சிறு சிறு பிழைகள் ஏற்கப்பட்டு வேட்புமனு உறுதி செய்யப்படுகிறது. ஆனால் ஐந்தாவது வார்டில் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் அலுவலர் நாம் தமிழர் கட்சியின் வேட்பு மனுவை சிறு காரணத்திற்காக நிராகரித்துள்ளது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நாம் தமிழர் கட்சியினர் கிழக்கு மண்டல அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் 10-வது வார்டு வேட்பாளர் பேரறிவாளனின் சட்டை கிழிந்தது.
இதனால் நாம் தமிழர் கட்சியினர் மேலும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேட்பு மனு பரிசீலனையில் காவல்துறையுடன் ஏற்பட்ட பிரச்சினையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் சட்டை கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பணிப்பெண் தாக்கியதால் 8 மாத குழந்தைக்கு மூளையில் ரத்தக்கசிவு