திருச்சி: வையம்பட்டி அருகே துலுக்கம்பட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனி மகன் முருகேசன் (42). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இதனிடையே முருகேசனின் மனைவி தேன்மொழி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது மகள்களுடன் தாய் வீட்டில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மனைவியின்றி வீட்டில் தனியாக இருந்த முருகேசன், ஒரு மாதமாக சரியாகச் சாப்பிடாமல் தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு தொடர்ந்து மன உளைச்சலிலும், உடல் சோர்வுற்றும் இருந்துவந்துள்ளார்.
இதனிடையே, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பிளேடால் அவர் தனது பிறப்புறுப்பை அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக மயக்கமடைந்த நிலையில் கிடந்த முருகேசனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது மனைவிக்குத் தகவல் அளித்துள்ளனர். வீட்டிற்கு வந்த தேன்மொழி, கணவரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், முருகேசனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். மேலும் சம்பவம் குறித்து வையம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.